Actress Vanishree
Actress Vanishree
Listen to this article

வசந்த மாளிகை: “பல ஜென்மங்கள்ல நடிகையாக முடியாம இறந்துபோயிருப்பேன்” – வாணிஶ்ரீ உருக்கம்

மறுபடியும் ரீ ரிலீஸாகி சிவாஜி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது ‘வசந்த மாளிகை’ திரைப்படம். அந்த நாள் நினைவுகளை எங்களுடன் ஷேர் செய்துகொள்ள முடியுமா மேம் என்றோம், ‘வசந்த மாளிகை’யின் நாயகி வாணிஶ்ரீயிடம். ”கோயில்ல இருந்து வீட்டுக்கு வந்தவுடனே போன் பண்ணட்டுமா” என்றவர், சொன்ன மாதிரியே அடுத்த அரை மணி நேரத்தில் போன் செய்தார்.

வாணிஶ்ரீ

Actress Vanishree

வசந்த மாளிகை வாய்ப்பு எப்படி வந்தது மேம்?

வசந்த மாளிகை படத்துல நான் புக் ஆகுறப்போ எனக்கு 17 வயசு. படம் முடிஞ்சு ரிலீஸாகுறப்போ 18 வயசு. தெலுங்குல ‘பிரேம் நகர்’, தமிழ்ல ‘வசந்த மாளிகை’. ரெண்டு மொழியிலேயும் நான்தான் ஹீரோயின். தெலுங்குலயும் சூப்பர் டூப்பர் ஹிட் ஆச்சு அந்தப்படம். தமிழ்ல ‘வசந்த மாளிகை’ எடுக்கணும்னு நினைச்சப்போ ஜெயலலிதாவை ஹீரோயினா செலக்ட் பண்ணியிருக்காங்க.

ஆனா, துரதிர்ஷ்டவசமா ஜெயலலிதாவோட அம்மா அந்த நேரத்துல இறந்துபோயிட்டாங்க. அவங்க ஷூட்டிங் வருவாங்களோ, இல்லியோன்னு யோசிட்டு படத்தோட புரொடியூசர் ராமநாயுடு சார் என்னை நடிக்கக் கேட்டார். சிவாஜிங்கிற இமயமலைக்கு பக்கத்துல நான் ஒரு ஐஸ் கட்டியாச்சேன்னு பயந்தேன்.தெலுங்குல நீதானேம்மா நடிச்சே. பயப்படமா நடின்னு உற்சாகப்படுத்தினார் ராமநாயுடு சார்.

எங்கம்மாவும், `ஒரு சாவித்திரி, ஒரு சரோஜாதேவி மாதிரி ஒரு வாணிஶ்ரீ தான். நீ யாருக்கும் குறைச்சல் கிடையாது. இந்த கேரக்டரை வாணிஶ்ரீ மாதிரி யாரும் பண்ண முடியாதுன்னு நீ சொல்ல வைக்கணும்னு’ என்னை மோட்டிவேட் பண்ணாங்க. நானும் யெஸ் சொல்லிட்டேன்.

Actress Vanishree

வசந்த மாளிகை’யில் அந்த ஹேர்ஸ்டைல் உங்க ஐடியாவா?

அந்தப்படம் கமிட்டான உடனே என்னோட நடிப்பு, என்னோட ஃபிகர், என்னோட மேக்கப், என்னோட ஹேர்ஸ்டைல், என்னோட புடவை, என்னோட டான்ஸுனு எல்லாத்துலேயும் வித்தியாசம் காட்டணும்னு 24 மணி நேரமும் யோசிச்சிருக்கேன்.

டான்ஸெல்லாம் ஒரு மாசத்துக்கு முன்னாடியே பிராக்டிஸ் பண்ண ஆரம்பிச்Rட்டேன். அந்த நேரத்துல எனக்கு லவ் அஃபையர்ஸ் எதுவும் கிடையாது. போன்ல பேசிக்கிட்டே இருக்கிற பழக்கமும் என்கிட்ட இல்ல. ஸோ, என் நினைப்பு முழுக்க வசந்த மாளிகை, வசந்த மாளிகைதான்னு இருந்துச்சு.

அந்தப்படத்துல சொந்தக்குரல்லதான் பேசினீங்களா?

ஆமா… அந்தப்படத்துல என்னோட மேக்கப், டிரெஸ்ஸிங், ஹேர்ஸ்டைல் எல்லாம் எப்படி சக்ஸஸ் ஆச்சோ, அதே மாதிரி என்னோட தமிழ் பேசுற விதமும் சக்ஸஸ் ஆச்சு. என் கேரக்டருக்கு நான்தான் குரல் கொடுப்பேன்னு ஆரம்பத்துலேயே சொல்லிடுவேன்.

மீறி டப்பிங்னு சொன்னா படமே வேண்டாம்னு சொல்லிடுவேன். சிவாஜி சார்கூட, ‘வாணி நிஜமா சொல்லு நீ தமிழ்ப்பொண்ணு தானே’ன்னு கேட்டிருக்கிறார். என்னோட தமிழைப்பார்த்து சிவாஜி சார் ஆச்சர்யப்பட்டார்ங்கிறது எவ்ளோ பெருமையான விஷயம். நெல்லூர் தமிழ்நாட்ல இருந்தப்போ தான் நான் பிறந்தேன். அப்போ நான் தமிழ்ப்பொண்ணுதானே…

Actress Vanishree

`உயர்ந்த மனிதன்’, `சிவகாமியின் செல்வன்’னு சிவாஜி சார்கூட நிறைய படங்கள் நடிச்சிருக்கேன். வாணி ஶ்ரீ நரி முகத்துல முழிச்சிட்டு வந்திருக்கா. அதான் தொடர்ந்து லக் அடிக்குதுன்னு எல்லோரும் சொன்னாங்க. என்னைப் பொறுத்தவரைக்கும் நான் சினிமாவுக்காகவே படைக்கப்பட்டேன்.

இந்த ஜென்மத்துல இல்ல… பல ஜென்மமா சினிமாவுல நடிக்கணும்னு ஆசைப்பட்டு நடிகையாக முடியாம இறந்துப்போயிருப்பேன்னு நினைக்கிறேன்.

அதான், இந்த ஜென்மத்துல நடிகையாகிட்டேன். இதோ ‘வசந்த மாளிகை’ ரிலீஸாகி 52 வருஷம் கழிச்சு இப்போவும் அந்தப்படம் பற்றி எல்லாரும் பேசுறது எவ்ளோ பெரிய கொடுப்பினை” என்கிறார் வாணிஶ்ரீ நெகிழ்ச்சியாக.

Can you drink ABC juice every day?

One cigarette cuts 20 minutes off your life

How many kilos can you lose in a month?