Barroz film Review
Barroz film Review
Listen to this article

‘இதுக்கு பேசாம பேசாமலேயே இருந்திருக்கலாம்..’ – இயக்குநராக மோகன் லால் ஈர்க்கிறாரா?

போர்ச்சுகீசியர்கள் கோவாவை ஆண்டு கொண்டிருந்த நேரத்தில்… அதாவது 1600-ல், போர்ச்சுகீசிய மகாராஜா டி காமாவுக்கு நம்பிக்கைக்குரியவராக இருக்கிறார் பரோஸ் (மோகன் லால்). அந்த மகாராஜாவுக்கும் மிகவும் விசுவாசமாக இருக்கிறார் இந்த பரோஸ். மகாராஜாவின் மகளான இஸபெல்லாவுக்கு (மாயா ராவ்) பரோஸ் அவ்வளவு ஃபேவரிட். ஒரு பிரச்னைக்குப் பிறகு டி காமா கோவாவிலிருந்து கிளம்ப வேண்டிய சூழல் வருகிறது. அந்த சமயத்தில் பரோஸின் விசுவாசமே அவருக்கு வினையாக அமைகிறது.

Barroz film Review

பரோஸின் விசுவாசத்தை நன்கு புரிந்து வைத்திருக்கும் டி காமா பரோஸுக்கு துரோகம் செய்து, அவரைப் பூதமாக மாற்றி, தனது வம்சத்தார் வரும் வரை அவரின் பொக்கிஷங்களைப் பாதுகாக்கக் கட்டளையிடுகிறார். மேலும், மற்றவர்களின் கண்களுக்குத் தெரியாதவராக மாறப்படுகிறார் பரோஸ். அதன் பிறகு 400 ஆண்டுகளாக அந்த பொக்கிஷங்களைப் பாதுகாத்து வருகிறார். பலர் முயற்சி செய்தும், பரோஸின் அதிரடியால் அப்பொக்கிஷங்களை நெருங்க முடியவில்லை. டி காமாவின் அடுத்த தலைமுறையினர் வந்து அந்த பொக்கிஷங்களைப் பெற்றுக் கொண்டார்களா, பரோஸுக்கு விமோசனம் கிடைத்ததா என்பதுதான் மோகன் லால் முதல்முறையாக இயக்குநராகக் களமிறங்கியிருக்கும் இந்த 3டி ஃபேண்டஸி திரைப்படத்தின் கதை.

மகாராஜாவுக்கு நம்பிக்கைக்குரியவராகவும், பாதுகாவலராக மாயாஜாலங்களை நிகழ்த்துபவராகவும் வழக்கம் போல் மாஸ் காட்டியிருக்கிறார் சேட்டன் மோகன் லால். ஆனால், அந்த மாஸ் தன்மையை அதிகப்படுத்த வேண்டிய ஃபேண்டஸி காட்சிகளில் செயற்கைத்தனங்களால், அவற்றை வீணடித்திருக்கிறார்.

Barroz film Review

படத்தின் முக்கிய கதாபாத்திரமாக இருக்கும் இஸபெல்லாவாக நடித்திருக்கும் மாயா ராவ், அதன் கனத்தை உணர்ந்து இன்னும் பங்களிப்பைச் செய்திருக்கலாம். போர்ச்சுகீசிய மகாராஜாவாக வரும் இக்னாஸியோ மாடீயோஸ் மற்ற காட்சிகளில் பொம்மையாக இருந்து, க்ளைமேக்ஸ் காட்சியில் மட்டும் அதிரடி காட்டி பாஸ் ஆகிறார். பரோஸுக்கு வழிகாட்டியாக வரும் ‘வூடூ’ பொம்மை படம் தொய்வடையும் சமயங்களில் ஆங்காங்கே கலகலப்பைக் கூட்டுகிறது.

‘மை டியர் குட்டிச்சாத்தான்’ புகழ் ஜிஜோ பொன்னூஸ் எழுதிய `Barroz: Guardian of D’Gama’s Treasure’ என்ற புத்தகத்தை மையப்படுத்தி குழந்தைகளுக்குப் பிடித்தமான வகையில் திரைப்படமாக்க முயன்றிருக்கிறார் இயக்குநர் மோகன் லால். ஆனால், வழக்கொழிந்து போன திருப்பங்கள், பின்கதை, கதாபாத்திரம் போன்றவற்றைத் திரைக்கதையில் சேர்த்து நம்மை ஏமாற்றியிருக்கிறார்கள்.

போர்ச்சுகீசிய பின்புலம், பொக்கிஷம், பூதம், பேசும் பொம்பை என தொடக்கத்தில் மட்டுமே கவர்கிறது படம். படத்தின் முக்கிய எமோஷனாக வலம் வருவது இஸபெல்லா கதாபாத்திரம்தான். ஆனால், பெரும்பாலான பகுதிகளில் பரோஸுக்கும் இஸபெல்லாவுக்கும் இடையிலான எமோஷன்கள் செயற்கைத்தனங்களுடன் கதகளி ஆடுவதால் திரைப்படத்துடன் கனெக்ட்டாக முடியாமல் நம்மைத் தள்ளி நிற்க வைக்கின்றன. முக்கிய வில்லனைச் சமாளிக்கப்போகும் ட்ரீட்மென்ட்டை முன்கூட்டியே ஆழமாக நம்மிடையே பதிவு செய்துவிட்டு, க்ளைமேக்ஸில் சப்ரைஸ் ஆகவிடாமல் தடுத்து நிறுத்தி, `Why bro?’ எனக் கோபத்துடன் கேள்வி கேட்க வைக்கிறார் இயக்குநர்.

3டி-யில் நல்ல அனுபவத்தைக் கொடுத்துக் கொண்டிருக்கும் வேளையில் திடீரென தொடர்பே இல்லாமல் ஆழ்கடலுக்குள் மூழ்கி அனிமேஷன் வடிவில் பாடலைக் கொடுத்து, தேவையில்லாமல் நீள்கிறது திரைக்கதை. மேலும், மற்ற பாடல்கள் இடம்பெறும் சூழலும் செயற்கையாகத் திணிக்கப்பட்ட உணர்வையே கொடுக்கின்றன. பரோஸ் யார் என்பதைப் படம் தொடங்கும் வேளையிலேயே எடுத்துரைத்துவிட்ட பின்னும், அதனை அடிக்கடி வெவ்வேறு விதமாகக் காட்சிப்படுத்தி ரிப்பீட் அடிப்பது பார்வையாளர்களைச் சோர்வடைய வைக்கின்றன.

பெரும்பாலான 3டி திரைப்படங்களை 2டி-யில் படம் பிடித்துவிட்டு இறுதிக் கட்ட பணியில் 3டி-க்கு மாற்றுவார்கள். இத்திரைப்படத்தை 3டி-யிலேயே படம் பிடித்து நல்ல திரையனுபவத்தைக் கொடுத்திருக்கிறது படக்குழு. சிறு சிறு பூச்சிகள் தொடங்கி இந்த ஃபேண்டஸி படத்திற்குத் தேவையான பல கிராஃபிக்ஸ் காட்சிகளில் அவ்வளவு நேர்த்தியான உழைப்பையும், நுணுக்கத்தையும் காண முடிகின்றன. இவை குழந்தைகளுக்குக் கூடுதலான உற்சாகத்தைக் கொடுக்கும். அதேநேரம், ஆழ்கடல் காட்சிகளில் மூழ்கிக்கிடக்கும் நேர்த்தியில்லாத அனிமேஷன் தன்மையைத் தூண்டில் போட்டுத் தூக்கியிருக்கலாம்.

கோவாவின் நிலப்பரப்பு, கோவாவிற்கேயுரிய டச் கோட்டைகள், கட்டடங்கள் போன்றவற்றை காட்சியாக்கத்தில் பயன்படுத்திய விதம் ஆறுதல் தருகின்றன.

Barroz film Review

3டி அனுபவத்தை மெருகேற்றிக் காட்சிப்படுத்துவதற்குப் பல நுணுக்கங்களைப் பின்பற்றி மந்திரக்காரராக மிளிர்கிறார் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன். ரிப்பீட் காட்சிகளைக் கத்தரித்து, அசதியடைய வைக்கும் இடங்களிலும் பட்டையைத் தீட்டத் தவறியிருக்கிறது அஜித்குமாரின் படத்தொகுப்பு. ஃபேண்டஸி படத்திற்கான பிரமிப்பிற்கும், மாயாஜாலத்திற்கும் துணை நிற்காமல், தனி டிராக்கில் ஓடுகிறது மார்க் கில்லியனின் பின்னணி இசை. பாடல்களில் வெரி குட் வாங்கவில்லை என்றாலும், ஜெஸ்ட் பாஸ் ஆகிறார் லிடியன் நாதஸ்வரம்.

வரலாற்று ஃபேண்டஸி கதையை, அன்ன நடை காட்சிகள், புதுமையில்லாத திருப்பங்கள் எனப் பல சேதாரங்களுக்கு உட்படுத்தி, ‘ஒரு சாதாரண 3டி படம்’ என்ற பாஸ் மார்க்கை போராடிப் பெறுகிறார் இந்த ‘பரோஸ்’.