Pongal Release: பிற்போடப்பட்ட விடாமுயற்சி; ஒரே நாளில் ரிலீஸை அறிவித்த படங்கள் என்னென்ன?
இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் குமார் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘விடாமுயற்சி’.
இப்படம் வருகிற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்திருந்தனர். ஆனால், தவிர்க்க முடியாத காரணங்களால் விடாமுயற்சி திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகாது என்று நேற்று (31.12.2024) இரவு அப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா அறிக்கை வெளியிட்டிருந்தது. இது அஜித் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. ‘விடாமுயற்சி’ ரிலீஸ் ஆகாமல் தள்ளிப்போனதால் சில படங்கள் பொங்கல் அன்று தங்களது படங்களை ரிலீஸ் செய்கின்றனர்.
மெட்ராஸ்காரன்

அந்தவகையில் SR புரொடக்ஷன் சார்பில் B. ஜகதீஸ் தயாரிப்பில், ‘ரங்கோலி’ பட இயக்குநர் வாலி மோகன் தாஸ் இயக்கத்தில், மலையாள நடிகர் ஷேன் நிகம், கலையரசன், நிஹாரிகா நடிப்பில், புதுமையான ஆக்சன் டிராமாவாக உருவாகியுள்ள திரைப்படம் ‘மெட்ராஸ்காரன்’ பொங்கலுக்கு ரிலீஸாக போவதாகப் படக்குழு அறிவித்திருக்கிறது.
அதேபோல இயக்குநர் இளையராஜா கலியபெருமாள் இயக்கத்தில் நடிகர் சிபி சத்யராஜ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘டென் ஹவர்ஸ்’.
இத்திரைப்படத்தினை டுவின் ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்திருக்கிறது. க்ரைம் த்ரில்லராக உருவாகியுள்ள இத்திரைப்படம் பொங்கல் தினத்தன்று வெளியாகும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.
‘தேஜாவு’ படத்தின் இயக்குநர் அரவிந்த் ஶ்ரீநிவாசன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘தருணம்’. கிஷன் தாஸ் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் கதாநாயகியாக ஸ்மிருதி வெங்கட் நடித்திருக்கிறார்.
தருணம்

ழென் ஸ்டுடியோஸ் சார்பில் தயாரிப்பாளர் புகழ் தயாரிக்கும் இப்படத்திற்கு தர்புகா சிவா இசையமைத்திருக்கிறார். இந்தப் படமும் பொங்கல் அன்று வெளியாகும் என்று முன்பே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று அதை உறுதி செய்திருக்கிறது படக்குழு.
சகாப்தம், மதுரை வீரன் ஆகிய திரைப்படங்களைத் தொடர்ந்து, மறைந்த நடிகரும் தே.மு.தி.க நிறுவனருமான விஜயகாந்த்தின் இரண்டாவது மகன் சண்முக பாண்டியன் நடிப்பில் வெளியாக இருக்கும் திரைப்படம் ‘படை தலைவன்’.

இயக்குநர் அன்பு இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருக்கிறார். இப்படமும் பொங்கல் அன்று வெளியாவதாகப் படக்குழு அறிவித்திருக்கிறது.

கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘காதலிக்க நேரமில்லை’. இப்படத்தில் யோகி பாபு, லட்சுமி ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்திருக்கும் இப்படமும் பொங்கல் தினத்தன்று வெளியாகிறது.

‘வெண்ணிலா கபடிக்குழு’, ‘நான் மகான் அல்ல’ உள்ளிட்ட வெற்றிப் படங்களை இயக்கிய சுசீந்திரன் இயக்கியுள்ள திரைப்படம் ’2கே லவ் ஸ்டோரி’ (2k love story). இப்படத்தில் அறிமுக நாயகன் ஜெயவீர், மீனாட்சி கோவிந்தராஜன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இமான் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இந்தப் படம் ஜனவரி 10 ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்திருக்கிறது.