சொடக்கு தக்காளி

புற்றுநோயை, சொடக்கு தக்காளி குணம் படுத்துமா ?

புற்றுநோய்க்கு சொடக்கு தக்காளியில் மருந்து இருக்கா - டாக்டர் அருண்குமார் சொல்வதை பாருங்க

புற்றுநோயைக் குணப்படுத்தும் அரிய வகை தாவரமான சொடக்கு தக்காளி என்னும் செடி அழிவின் விளிம்பில் இருக்கிறது என்று சமீபத்தில் சில பதிவுகள் வெளிவந்தன. தமிழ்நாட்டின் சில இடங்களில் விவசாயிகள் இந்த செடியின் அழிவு குறித்து வருத்தம் தெரிவிப்பதாக ஊடகங்களில் கூட செய்திகள் வெளிவந்தன.

நிஜமாகவே இந்த சொடக்கு தக்காளி புற்றுநோயை குணப்படுத்துமா? புற்றுநோய் செல்களை அழிக்குமா? இதற்கு அறிவியல் ரீதியான ஆராய்ச்சிகள் நிஜமாகவே இருக்கிறதா? என்பது பற்றி டாக்டர் அருண் குமார் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் என்ன சொல்லியிருக்கிறார்னு பார்ப்போம் வாங்க.

சொடக்கு தக்காளி முன்பெல்லாம் வயல் ஓரங்களிலும் சாலை ஓரங்கள், நாம் வீட்டின் பக்கத்திலேயே முளைத்திருப்பதை பார்த்திருப்பீர்கள். இதை மிக சாதாரணமாக கடந்து போயிருப்போம். பறவைகள் மட்டும் இந்த பழங்களைக் கொத்தித் தின்னும். நாமோ அதை சாப்பிடலாமா என்று கூட தெரியாமல் இருப்போம்.

ஆனால் இந்த சொடக்குத் தக்காளி நிறைய மருத்துவ குணங்களும் குறிப்பாக புற்றுநோய் எதிர்ப்பு பண்புகள் கொண்டதுனு சொல்லப்படுது. அது உண்மையானுதான் பார்க்க போறோம்.

சொடக்குத் தக்காளியில் புற்றுநோய் எதிர்ப்பு பண்பு இருக்கா?

பொதுவாகவே வாய்மொழி இந்த உணவு கேன்சருக்கு நல்லது. இந்த காய்கறி, இந்த பழம் கேன்சருக்கு நல்லதுனு நிறைய சொல்லக் கேட்டிருப்போம்.

ஆனால் உண்மையிலேயே இந்த சொடக்கு தக்காளியில் ஓரளவுக்கு கேன்சர் எதிர்ப்பு பண்புகள் இருக்கிறது என்றும் அதற்கு அறிவியல் ரீதியாக சில அடிப்படையான ஆய்வுகள் மட்டும் நடத்தப்பட்டிருப்பதாக டாக்டர் அருண் குமார் குறிப்பிடுகிறார்.

ஆனால் இதை சாப்பிடலாமா? கூடாதா? என்பது பற்றியும் சொல்லியிருக்கிறார். வாங்க பார்க்கலாம்.

சொடக்கு தக்காளி அறிவியல் பெயர்

சொடக்கு தக்காளி

சொடக்குத் தக்காளி என்பது nightshade என்று சொல்லப்படுகிற வகையைச் சேர்ந்த ஒரு செடி. அதாவது தக்காளி, கத்தரிக்காய், மிளகுத்தக்காளி உள்ளிட்ட குடும்ப வகையைச் சேர்ந்த செடி ஆகும்.

இது Physalis minima என்னும் அறிவியல் பெயரால் வழங்கப்படுகிறது.

புற்றுநோய் எதிர்த்து போராடுமா?

இந்த சொடக்குத் தக்காளியில் உள்ள சில மூலக்கூறுகள் அடிப்படையில் புற்றுநோய் எதிர்ப்பு பண்புகளைக் கொண்டிருக்கத்தான் செய்கின்றன. குறிப்பாக கீழ்வரும் இரண்டு வகையான பண்புகள் இதில் இருக்கிறது.

1. Withanolides (வித்தனாலிட்ஸ்),
2. Physalin (பைசாலின்),

இந்த இரண்டு மூலக்கூறுகளுக்குமே நிறைய வகையான புற்றுநோய் செல்களைத் தடுக்கவும் தாக்கி அழிக்கவும் செய்யும் தன்மை இருக்கிறது.

கர்ப்பப்பை வாய் புற்றுநோய்

மேலே குறிப்பிட்ட இரண்டு மூலக்கூறுகளுக்கும் புற்றுநோய் செல்களைத் தாக்கி அழிக்கக்கூடிய தன்மை இருப்பதாக ஆய்வுகளில் கண்டறியப்படட்டு இருக்கிறது.

குறிப்பாக, கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்கு (Cervical Cancer) எதிராக செயல்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது.

கர்ப்பப்பை வாய் புற்றுநோய் செல்களை எடுத்து தனியே ஆய்வு செய்ததில் இந்த செல்கள் சொடக்குத் தக்காளியில் உள்ள மூலக்கூறுகளால் அழிக்கப்படுவதாக கண்டறியப்பட்டு இருக்கிறது.

இது முழுமையான ஆய்வா?

மேலே குறிப்பிட்டது போல் இதில் சில புற்றுநோயை எதிர்த்துப் போராடும் மூலக்கூறுகள் இருப்பதாகக் கண்டறியப்பட்டு இருக்கிறதே தவிர இது எப்படி செயல்படும் என்பதற்கான போதிய ஆய்வுகள் கிடையாது.

சொடக்குத் தக்காளி மட்டுமல்ல, இதுபோன்ற பல பொருள்கள் பற்றிய பல ஆய்வுகள் இன்னும் அடிப்படை நிலையிலேயே இருக்கின்றன.

மனிதர்க்ளுக்கான சோதனை மட்டுமல்ல, விலங்குகளில் கூட சோதனை செய்யப்படாததாகவே இருக்கின்றன. இன்னும் சொல்லப்போனால் முழுமையாக ஆய்வகங்களில் கூட ஆய்வு செய்யப்படவில்லை.

அடிப்படையில் இந்த செல்களை எடுத்து ஆய்வகங்களில் முதல் படியாக கல்ச்சர் செய்து ஆய்வு செய்து பார்ப்பார்கள். அந்த நிலையில் தான் இந்த ஆய்வுகள் இருக்கின்றன.

சொடக்கு தக்காளியை புற்றுநோய்க்கு சாப்பிடலாமா? கூடாதா?

சொடக்குத் தக்காளியை பொதுவாக யார் வேண்டுமானாலும் சாப்பிடலாம். அதில் தவறு இல்லை. ஆனால் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதை மருந்தாக நினைத்து முழுமையாக நம்பி சாப்பிடுவது தவறு.

குறிப்பாக புற்றுநோய்க்காக மருந்துகள் எடுத்துக் கொண்டு இருப்பவர்கள் இதை சாப்பிட்டால் புற்றுநோய் சரியாகிவிடும் என்று இதை தினமும் சாப்பிட்டுக் கொண்டு மருந்துகளைத் தவிர்த்து விடுவார்கள். அது மிக மிக தவறு. அது மிகப்பெரிய ஆபத்தில் முடியும். அந்த தவறை மட்டும் செய்யாதீர்கள்.

இறுதியாக,

சொடக்குத் தக்காளி ஆரோக்கியமான ஒரு உணவுதான். அதை எல்லோருமே தினமும் ஒன்று அல்லது இரண்டு என சாப்பிடலாம். ஆனால் அதை புற்றுநோய்க்கான மருந்து என்று நினைத்துக் கொண்டு மருநதுகளை தவிர்த்துவிட்டு இதை சாப்பிடுவது ஆபத்து என்கிறார் டாக்டர் அருண்குமார்.

பொறுப்புத் துறப்பு – இந்த கட்டுரை ஒரு விழிப்புணர்வு பதிவே. இதில் சொல்லப்பட்டவை தகவல் நோக்கங்களுக்காக டாக்டர் அருண்குமார் அவர்களின் இன்ஸ்டகிராம் பதிவை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டது. இதன் உண்மைத் தன்மை, துல்லியம் மற்றும் செயல்திறன் ஆகியவற்றுக்கு பொறுப்பாகாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *