மலம் கல் போல இறுகி, மலக்குழாய் வழியே கிழித்துக்கொண்டு வெளியே வரும்போது உள்மூலம், வெளிமூலம் பிரச்னைகளாக மாறும்.
எனக்கு கடந்த சில வருடங்களாக மலச்சிக்கல் பிரச்னை இருக்கிறது. சமீப காலமாக மூலநோய் அறிகுறி போலவும் உணர்கிறேன். நீண்டநாள் மலச்சிக்கல் பிரச்னையானது பிற்காலத்தில் மூலநோயாக மாறும் என்கிறார்கள் சிலர். அது உண்மையா… நான் மலச்சிக்கலுக்கு மருந்துகள் எடுத்துக்கொள்ளலாமா?
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் அருணாசலம்.
பள்ளிக்கூடம் போகும் வயதிலிருந்தே பிள்ளைகளுக்கு தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டியதன் அவசியத்தையும், தினமும் காய்கறி, பழங்கள் சாப்பிட வேண்டியதன் அவசியத்தையும் சொல்லித் தர வேண்டும்.
ஒரு யானையானது தினமும் 450 கிலோ எடையுள்ள காய்கறிகளைச் சாப்பிடக்கூடியது. அப்போதுதான் அதற்குத் தேவையான வலிமை கிடைக்கும். காய்கறிகளில் எல்லா சத்துகளும் உள்ளன என்பது யானைக்குத் தெரிந்த அளவுக்குக்கூட மனிதர்களுக்குத் தெரிவதில்லை.
அரிசி உணவுகளை அதிக அளவில் எண்ணெயும் மசாலாவும் சேர்த்துச் சமைத்துச் சாப்பிடுவதில் தென்னிந்தியர்களையும் வட இந்தியர்களையும் மிஞ்ச முடியாது. வெறும் நுனிப்புல்லை மட்டுமே மேயும் முயலுக்கு உடலின் எடையைத் தூக்கித் தாவிச் செல்லும் அளவுக்கு சக்தி இருக்கிறது. மான் உள்ளிட்ட எத்தனையோ உயிரினங்களை இதுபோல உதாரணம் சொல்லலாம். மனிதர்கள்தான் உணவுப்பழக்கத்தில் தவறு செய்கிறார்கள்.
மலச்சிக்கல் பிரச்னைக்கான முக்கிய காரணமே, உணவுகளை அதிக எண்ணெய், மசாலா சேர்த்து அளவுக்கதிகமாக வறுத்துப் பொரித்துச் சாப்பிடுவதுதான். அடுத்து போதிய அளவு தண்ணீர் குடிக்காதது. காலை 6 மணி முதல் மாலை 6 மணிக்குள் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். 40 கிலோ எடையுள்ள ஒருவர் தினம் 2 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.

அதிக எண்ணெய், மசாலா சேர்த்த உணவுகளை சாப்பிடுவது மலச்சிக்கல் பிரச்னைக்கான முக்கிய காரணம்.
7 மணி நேரம் தூங்க வேண்டும். தினம் 5 வேளை காய்கறி, பழங்கள் சாப்பிட வேண்டும். குடலின் அசைவை சரிசெய்து, அதன் மூலம் மலச்சிக்கலை குணமாக்கும் மருந்துகள்தான் நவீன மருத்துவத்தில் கொடுக்கப்படும்.
சிலர் பேதி மருந்துகளை எடுத்துக்கொண்டால், மலம் வெளியேறி, குடல் சுத்தமாகிவிடும் என நினைத்துக்கொண்டு அடிக்கடி அவற்றை எடுத்துக்கொள்வோர் இருக்கிறார்கள். இதில் உடலிலுள்ள நீர்ச்சத்தும் வெளியேறி விடும். இது மிகவும் தவறு. வருடம் ஒரு முறை டீவேர்மிங் எனப்படும் குடல்புழு நீக்க மாத்திரையை எடுத்துக்கொள்ள வேண்டும்.
விளம்பரங்களில் வரும் மலச்சிக்கல் மருந்துகளை சாப்பிட்டால்தான் மலம் வெளியேறும் என நம்பும் இடத்துக்கு மக்கள் வந்துவிட்டார்கள். குடல் என்பது மனிதர்களுக்கு தொங்கும் உறுப்பு. எனவே, காலையில் எழுந்ததும் நடைப்பயிற்சி செய்வதன் மூலம் குடல் அசைந்து மலச்சிக்கல் சரியாகும்.
வயதானவர்கள் குறைந்த அளவு உணவு உட்கொள்வதால் அவர்களுக்கு மலச்சிக்கல் வரும். குறைந்த அளவு சாப்பிடுவோரும் நிறைய காய்கறி, பழங்கள் சேர்த்துக்கொண்டால் மலச்சிக்கல் வராமல் தடுக்கலாம்.
குடலின் அசைவை சரிசெய்து, அதன் மூலம் மலச்சிக்கலை குணமாக்கும் மருந்துகள்தான் நவீன மருத்துவத்தில் கொடுக்கப்படும்.
தண்ணீரே குடிக்காத பட்சத்தில் மலக்குடலில் மலம் சேரும்போது, அதிலுள்ள தண்ணீரையெல்லாம் குடல் உறிஞ்சிக்கொள்ளும். அதனால் மலம் இறுகிவிடும். மலம் கல் போல இறுகி, மலக்குழாய் வழியே கிழித்துக்கொண்டு வெளியே வரும்போது உள்மூலம், வெளிமூலம் பிரச்னைகளாக மாறும்.
நார்ச்சத்துள்ள காய்கறிகள், பழங்களும் மலத்தை இறுகாமல் பார்த்துக்கொள்ளும்.