இளைஞர்களுக்கு வரும் நெஞ்சு வலி காரணம்

இளைஞர்களுக்கு வரும் நெஞ்சு வலி காரணம்:
டீனேஜ் பிள்ளைகள் மார்பு வலி வந்தால் உடனே கவலை கொள்ள வேண்டாம். பல நேரங்களில் இவை கவலைப்பட வேண்டிய காரணமாக இல்லாமல் இருக்கலாம். அதே நேரம் அலட்சியமும் வேண்டாம் என்கிறார் டாக்டர் பதம்குமார்.
ஏனெனில் மார்பு வலி வந்த உடன் ஓடி போய் இசிஜி எடுக்கிறார்கள். அப்போது எல்லாமே நார்மல் என்று வரும். அதனால் இளவயதினரிடம் இருக்கும் மார்பு வலிக்கு என்ன காரணம்? இது இதய நோயுடன் தொடர் கொண்டுள்ளதா? அறிகுறிகள் மூலம் மார்பு வலி காரணத்தை கண்டறிய முடியுமா என்பதை தெரிந்துகொள்வது அவசியம் என்கிறார்.
இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பதிவில் அவர் என்ன சொல்லியிருக்கிறார் என்பதை தெரிஞ்சுக்கலாம் வாங்க!
மார்பு வலிக்கு பல காரணங்கள் உள்ளன. உங்கள் இதயம், நுரையீரல் அல்லது செரிமான அமைப்பில் உள்ள பிரச்சனைகள் காரணமாக இருக்கலாம். சில காரணங்கள் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கலாம். சில காரணங்கள் ஆபத்தானவை அல்ல. உங்களுக்கு மார்பு வலி வரும் போது அதனுடன் இதய நோய் தொடர்பான அறிகுறிகள் உள்ளதா என்பதையும் கவனிக்க வேண்டும்.
டீனேஜ் வயதில் வரக்கூடிய மார்புவலிக்கு என்ன காரணமாக இருக்க முடியும், இதய நோய் என்பதை சொல்லும் அறிகுறிகளாக சொல்லப்படுவது என்ன என்பதை இந்த கட்டுரையில் தெரிந்துகொள்வோம்.
இளவயதினருக்கு நெஞ்சு வலி வர என்ன காரணம்?

நெஞ்சு வலி பலருக்கும் வரலாம். அது லேசான வலியாகவோ அல்லது நெஞ்சை பிழிவது போன்றோ இருக்கலாம். இவை எல்லாமே மாரடைப்பின் அறிகுறிகள் அல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும். ஏனெனில் டீனேஜில் வருவதற்கு தீவிரமான காரணங்கள் குறைவாகவே இருக்கும்.
டீனேஜ் நெஞ்சு வலி வர முக்கிய காரணம் காஸ்டோகான்ட்ரைட்டிஸ் Costochondritis என்கிறார் டாக்டர் பதம் குமார். விலா எலும்பை மார்பெலும்போடு இணைக்கும் குருத்தெலும்பில் ஏற்படும் வீக்கமே இந்த காஸ்டோகாண்ட்ரைட்டிஸ்.
இந்நிலையில் இது இடது பக்க நெஞ்சு பகுதியில் வரும் அதே போன்று மாரடைப்பு போன்று அது தோள் பட்டைக்கும் இலேசாக பரவலாம். இந்நிலையில் இந்த நெஞ்சுவலியை எப்படி புரிந்துகொள்ள வேண்டும் என்பதையும் கூறுகிறார் டாக்டர் பதம்குமார்.
நெஞ்சு இறுக்கம் போன்ற வலிக்கு என்ன காரணம்?

இதய நோய் அல்லது மாரடைப்பால் நெஞ்சு வலி வரும் போது வலி இருக்கும். ஆனால் எங்காவது கை வைத்து அழுத்தினால் தனித்து அந்த இடத்தில் மட்டும் வலி இருக்காது. எல்லா இடங்களிலும் வலி உணர்வு இருக்கும்.
ஆனால் இந்த காஸ்டோகான்ட்ரைட்டிஸ் பிரச்சனை இருந்தால் எந்த இடத்தில் வலி தீவிரமாக இருக்கிறதோ அந்த இடத்தில் அழுத்தினால் வலி தாங்க முடியாமல் துடித்து விடுவார்கள்.
சிலர் நெஞ்சு அழுத்துவது போல் உள்ளது என்று அலறுவார்கள். பிறகு ஈசிஜி எடுத்து பார்த்தால் எந்த பாதிப்பும் இருக்காது. இது இதய பாதிப்பு தொடர்பான வலி அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.
நெஞ்சு வலி இருக்கும் போது அசைந்தால் வலி அதிகமாகிறதா?

மாரடைப்பு அல்லது இதய நோய் தொடர்பான வலி தொடர்ந்து இருக்கும். அசையும் போது ஏதேனும் உடல் செயல்பாடு செய்யும் போது வலி தீவிரமாக இருக்காது. மாரடைப்பு போன்ற நிலையில் எதையும் செய்யவே முடியாது.
காஸ்டோகான்ட்ரைட்டிஸ் வலியாக இருந்தால் அவர்கள் இருமும் போது, தும்மும் போது, குனிந்து நிமிரும் போது நடக்கும் போது வலி அதிகமாக இருக்கும்.
உங்கள் பிள்ளை நெஞ்சுவலி என்று சொல்லும் போது அசைந்தால் வலி அதிகமாக இருக்கு என்று சொன்னால் அது இதய நோய் தொடர்பான அறிகுறி அல்ல என்பதை புரிந்துகொள்ளுங்கள்.
நெஞ்சு வலி தொடர்ந்து இருந்தால் அதற்கு காரணம் என்ன?

நெஞ்சுவலி இருக்கும் போது அது மாரடைப்பு அல்லது இதய நோய் தொடர்பான பாதிப்பாக இருந்தால் அந்த வலி படிப்படியாக வேகமாக அதிகரிக்கும். அதே போன்று அவை தொடர்ந்து நீண்ட நேரம் இருக்காது. உடனடியாக சிகிச்சை வேண்டிய அறிகுறியை உணர்த்தும். நீண்ட நாள் இருக்காது.
ஆனால் காஸ்டோகான்ட்ரைட்டிஸ் பிரச்சனையால் வலி வந்தால் நாள் முழுவதும் அந்த வலி தொடர்ந்து 1 – 2 வாரங்கள் வரை இருக்கும். அதனால் வலி தொடர்ந்து இருந்தால் அது மாரடைப்பு அல்லது இதய நோய் அறிகுறியாக இருக்காது.
எனினும் உங்கள் இதய ஆரோக்கியத்தை பாதுகாப்பாக வைத்திருக்க ஆரோக்கியமான பழக்கவழக்கங்களை பின்பற்ற வேண்டும்.
இளவயதில் மார்பு வலி ஏன் வருகிறது?
நெஞ்சு வலியுடன் வரக்கூடிய மற்ற அறிகுறிகள் என்னென்ன?

நெஞ்சு வலி இதய நோயாக இருந்தால் அது மூச்சுத்திணறல் ஏற்படுத்தும், இதயத்துடிப்பு வேகமாக இருக்கும், அதிகமாக வியர்க்கும்.
ஆனால் காஸ்டோகான்ட்ரைட்டிஸ் இருந்தால் எந்த அறிகுறியும் இருக்காது. இவர்களுக்கு வலி மட்டுமே இருக்கும். அசெளகரியமான அறிகுறிகள் எதுவும் இருக்காது என்கிறார் டாக்டர் பதம்குமார். இந்நிலையில் மாரடைப்பு வந்ததோ என்ற பதட்டம் தேவையில்லை.
யாருக்கெல்லாம் நெஞ்சு வலி வரலாம்?

உடற்பயிற்சி செய்யும் டீனேஜ் வயதினருக்கு நெஞ்சு வலி வரலாம்.
ஆஸ்துமா போன்ற நுரையீரல் பிரச்சனைகள் நெஞ்சு அழுத்தத்தை ஏற்படுத்தும்.
குழந்தைகளுக்கு நெஞ்செரிச்சல், எதுக்களிப்பு கூட நெஞ்சுவலிக்கு காரணமாக இருக்கலாம்.
சில நேரங்களில் இதய பிரச்சனைகளை உணர்த்தும் அறிகுறிகளாகவும் அவை இருக்கலாம். பிறக்கும்போதே இதய நோய் இருக்கலாம். அவை வளர்ந்த பிறகு அறிகுறி வெளிப்படுத்தி இருக்கலாம்.
இதயம் சரியா வேலை செய்யாததை குறிக்கும் வகையில் அது கார்டியோமையோபதியாக இருக்கலாம்.கிருமிகள் தொற்று வீரியமாகி இதயத்தில் வீக்கம் வரலாம்.
அதனால் நெஞ்சு வலி வந்தால் நீங்களே சுயமாக முடிவுக்கு வராமல் மருத்துவரை அணுகி உரிய பரிசோதனை செய்துகொள்வதும் அதற்கு சிகிச்சை எடுத்துகொள்வதும் பாதுகாப்பானது.
பொறுப்பு துறப்பு:
இந்த கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நோக்கங்களுக்காக மட்டுமே. இந்த கட்டுரை இன்ஸ்டாகிராம் வீடியோ பதிவை அடிப்படையாக கொண்டு வழங்கப்பட்டுள்ளது. மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றாக இல்லை. மேலும் விவரங்களுக்கு எப்போதும் மருத்துவரை அணுகவும்.